நாடு முழுவதும் உள்ள 438 தேசிய பூங்காக்கள் பங்கேற்ற மதிப்பீட்டில், மூணாறு வன உயிரினப் பிரிவின் கீழ் செயல்படும் கேரளா மாநிலத்தில் உள்ள இரவிகுளம் பூங்கா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் டாச்சிகம் பூங்கா சிறந்த பூங்காக்களாக தேர்வு செய்யப்பட்டன. இரவிகுளம் பூங்கா 92.97% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நியமித்த நிபுணர் குழு, 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வில், நாடு முழுவதும் உள்ள அனைத்து 438 பூங்காக்களும் பங்கேற்றன. சர்வதேச தரவுகளைக் கருத்தில் கொண்டு, ‘இன்டர்நேஷனல் யூனியன் பார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர்’ மற்றும் ‘வேர்ல்டு கமிஷன் ஆன் புரொடெக்டட் ஏரியாஸ்’ போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆறு முக்கிய பாதுகாப்பு அளவுகோல்கள் மற்றும் 32 தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
97 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இரவிகுளம் பூங்கா உலகிலேயே அதிக அளவில் நரிவாள் தவளைகள் காணப்படும் பகுதியாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் ஆதரிக்கும் முன்மாதிரியாகவும் இது அமைந்துள்ளது. 1975ம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாகவும், 1978ல் கேரளாவின் முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்ட இரவிகுளம், தற்போது 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது.
இந்தப் பூங்காவின் சிறப்புத்தன்மைகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் சுற்றுச்சூழல் பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றுள்ளன. இந்தியாவின் தேசிய பூங்காக்களின் மேம்பாட்டிற்கும், வனவிலங்கு பாதுகாப்பிற்கும் இது ஒரு பெரிய சாதனையாகும்.