கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தலங்களுக்கு பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை ஒருவருக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் அழைத்துச் செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த செப்., 28-ம் தேதி முதல் மாற்று ஒருவழிப்பாதை முறை அமல்படுத்தப்பட்டது. கோக்கர்ஸ் வாக்கில் தொடங்கி பாம்பார்புரம் சாலை, பில்லர் ராக், குணா குகை, பைன் காடுகள், மோயர் பாயின்ட், அப்சர்வேட்டரி சாலை வழியாக ஏரிச் சாலையை அடைய இந்த ஒருவழிப் பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இப்பகுதிகளில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்த பகுதிகளை சுற்றி காட்ட, கொடைக்கானல் வேன் டிரைவர்கள் சங்கம், ஒருவருக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயித்துள்ளது. வேன் டிரைவர்கள் சங்க தலைவர் அந்தோணி கூறுகையில், “சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, குறிப்பாக பஸ்களில் வருபவர்களுக்கு, ஒருவருக்கு, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து, எங்கள் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, குறிப்பிட்ட சுற்றுலா தலங்களை காட்ட மறுத்தாலோ, எங்கள் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.