மும்பை: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்இ சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிந்து 82,497 புள்ளிகளில் நிலைத்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 547 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளில் நிலைத்தது. அனைத்து துறை குறியீடுகளும் சரிந்தன.
ஒரே நாளில் 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழந்துள்ளனர். நிஃப்டி 50 குறியீட்டில் 48 பங்குகள் சரிந்தன. பிபிசிஎல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல்&டி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.
இதற்கிடையில், ஜெஎஸ்டபிள்யு (1.33%) மற்றும் ஓஎன்ஜிசி (0.36%) ஆகிய 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் 2,914 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன.
இதில் 638 பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தன. 2,201 பங்குகள் சரிந்தன. 75 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
அதேபோல், இந்திய பங்குச் சந்தைகளும் புதிய உச்சத்தைத் தொட்டதால் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தனர். கூடுதலாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சீன சந்தையில் முதலீடு செய்ய அதிக பங்குகளை விற்றனர்.
இது போன்ற காரணங்களால்தான் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.