புத்தாக்க நிறுவனங்களை தொடங்க உகந்த சூழல் கொண்ட மூன்றாவது பெரிய நாடாக இருப்பதாலும், உலகளவில் ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு முக்கிய இடம் பிடித்து வருவதாலும், இந்தியாவில் ஸ்டார்ட் அப் கட்டமைப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த துறையில் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ள தகவலால் தெரியவந்துள்ளது.

தன்னார்வ அமைப்பான டிராக்சன் (TRACXN) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2023ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 15,921 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதற்குமுன்னதாக 2022ஆம் ஆண்டு 12,717 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 28,638 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடியுள்ளன. இது 2019 முதல் 2022 வரை ஏற்பட்ட மூடல்களைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும்.
தற்போதைய ஆண்டில் மட்டும், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் 259 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், பல நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் டிராக்சன் தெரிவித்துள்ளது.
மறுபுறம், 2019 முதல் 2022 வரையிலான காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9,600 ஸ்டார்ட் அப்புகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் வெறும் 5,264 ஆகவே இருந்துள்ளன. 2025 ஆம் ஆண்டு இதுவரை தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை 125 மட்டுமே என்பதும் கவலைக்குரியதாக உள்ளது.
முக்கியமாக விவசாயம், நிதிசார் தொழில்நுட்பம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை இந்தியாவின் புத்தாக்க சிந்தனைகளையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.