தங்கத்தை சேமிப்பின் அடையாளமாகக் கருதும் இந்தியர்களுக்கு உலகின் சில நாடுகளில் தங்கம் மலிவாக கிடைப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், பலர் வெளிநாடுகளில் தங்கம் வாங்குவது பொருத்தமாக இருக்குமா என்று ஆராய்ந்து வருகின்றனர்.
துபாய் தங்கம் வாங்குவதற்கான சிறந்த இடமாகும். அங்கு 24 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை சுமார் ரூ.1,14,740 ஆகும், இது இந்தியாவில் உள்ள ரூ.1,30,910 விலையை விட குறைவு. ஜிஎஸ்டி இல்லாமை, குறைந்த இறக்குமதி வரிகள், குறைந்த உற்பத்தி செலவுகள் ஆகியவை இதற்குக் காரணம். அதேபோல் அமெரிக்காவில் 10 கிராம் தங்கம் ரூ.1,15,000க்கு கிடைக்கிறது. குறைந்த சுங்கவரி மற்றும் உற்பத்தி கட்டணங்களால் விலை குறைவாக உள்ளது.

ஆசியாவில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் தங்கம் வாங்க சிறந்த இடங்கள். ஹாங்காஙில் வரி மற்றும் VAT இல்லாததால் 10 கிராம் தங்கம் ரூ.1,13,000க்கு கிடைக்கிறது. சிங்கப்பூரில் 10 கிராம் தங்கம் ரூ.1,18,880 மட்டுமே. அங்குள்ள ஜிஎஸ்டி இல்லாமை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் (TFS) ஆகியவை தங்க விலையை இந்தியாவை விட 5–8% குறைவாக வைத்திருக்கின்றன.
குவைத் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலும் தங்கம் மலிவாகக் கிடைக்கிறது. குவைத்தில் 10 கிராம் தங்கம் ரூ.1,13,570 ஆகவும், துருக்கியில் ரூ.1,13,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த வரி மற்றும் இறக்குமதி கட்டணங்கள் காரணமாக விலை குறைவாக உள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவதில் அளவு கட்டுப்பாடுகள் இருப்பதால், வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.