மும்பை நகரில் தொழிலதிபர் அனில் அம்பானியை சுற்றியுள்ள மோசடி குற்றச்சாட்டுகள், தற்போது மாபெரும் அதிரடி நடவடிக்கையை உருவாக்கி உள்ளன. யெஸ் வங்கியில் ரூ.3,000 கோடி கடனை பெற்ற பின்னர், அதை போலியான நிறுவனங்களுக்கு மாற்றி மோசடி செய்ததாக சிபிஐ இரு வழக்குகளை பதிவு செய்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 24ஆம் தேதி அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களில் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனைகள் மும்பை, புதுடில்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. ரிலையன்ஸ் குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 35 இடங்கள், 50 நிறுவனங்களில் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகளில், 25 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், யெஸ் வங்கியில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் தேடப்பட்டு வருகின்றன.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில், ஒரு ஆண்டுக்குள் கடன் இருமடங்காக அதிகரித்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், இந்தப் பின்னணியில் மோசடியைக் கண்டறிந்துள்ளனர். கடன் அனுமதிக்கு முன் பணம் விடுவிக்கப்பட்டது, முதலீட்டு ஆவணங்களில் தவறான தேதிகள் போன்ற விவரங்கள் மூலம், பணமோசடியின் பாதைகள் வெளிச்சம் காணக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் குழுமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையின் முடிவில், அமலாக்கத்துறை முக்கிய தகவல்களை வெளியிடவிருக்கிறது. இது அனில் அம்பானிக்கு எதிரான வழக்குகளில் புதிய திருப்பமாக அமைவதற்கும் வாய்ப்பு உள்ளது.