பெங்களூருவில் பைக் டாக்ஸி சேவைகள் இளைஞர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அலுவலகங்களுக்கு செல்லும் பயணத்தில், இந்த சேவைகள் மலிவான விலையில், நேரத்தை சேமித்து பெரும் நன்மையை வழங்கியது.
ஆனால், தற்போது கர்நாடக அரசு பைக் டாக்ஸி சேவையை தடை செய்திருப்பதால், பொதுமக்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர். ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் மட்டுமே தேர்வாகும் நிலையில், பயணச் செலவுகள் அதிகரித்து, மக்கள் குமுறத் தொடங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பயணிகள் தங்கள் எதிர்மறையான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஒருவரும், பைக் டாக்ஸிக்கு பதிலாக ஆட்டோ பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், நாள்தோறும் ரூ.700 வரை செலவாகிறது எனக் கூறியுள்ளார். மற்றொரு பயனர், போட்டியாளர்கள் இல்லாததால் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக விலைகளை நிர்ணயித்து வசூலிக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓலா போன்ற நிறுவனங்கள் ஜீரோ கமிஷன் வழங்கினாலும், கட்டணங்களில் மாற்றமின்றி உள்ளது என்பது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசலுடனும் உயர்ந்த செலவுகளுடனும் பொதுமக்கள் வாழ்ந்துவரும் சூழ்நிலையை அரசு கவனத்தில் எடுத்து தீர்வுகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.