உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக சிறப்பாக சேமிக்க என்ன செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? குழந்தையின் கல்வி, திருமணம் அல்லது வாழ்வின் பிற முக்கிய நிகழ்வுகளுக்காக பணத்தை சேமிப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகும். இதற்காக அரசு பல சிறுசேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை பாதுகாப்பாக சேர்த்துக்கொள்ளலாம்.

நிதி நிபுணர் பி. பத்மநாபன், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு, தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் என்பது சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்துடன் ஒப்பிடும்போது இரட்டிப்பு வருமானத்தை வழங்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் குறைவான ஆபத்துடன் அதிக வருமானத்தை வழங்குகிறது. இதை பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண் குழந்தைகளும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பல பெற்றோர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து இன்னும் தெரிவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்பது முற்றிலும் பெற்றோரின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம் மத்திய அரசால் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்கிய பிறகு, 21 ஆண்டுகளுக்குப் பின் அல்லது 18 ஆண்டுகள் முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்ளும்போது முழு தொகையையும் திரும்ப பெறலாம்.
தற்போது இந்த திட்டத்தில் 8.2% வட்டி கிடைக்கிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை பணத்தை சேமிக்கலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கும். இது பெற்றோருக்கு வரி குறைவையும் வழங்குகிறது.
ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) என்பது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு நல்ல பலனைத் தருகிறது.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், நீண்ட காலத்திற்கும் நல்ல வருமானத்தை வழங்குகின்றன. குழந்தையின் கல்வி அல்லது திருமண செலவுகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோருக்கு இது சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்காது. ஆனால், ELSS திட்டத்தில் முதலீடு செய்தால் வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
இவை தவிர, பெற்றோர் குழந்தையின் எதிர்காலத்திற்காக பங்குச் சந்தை, பொன் முதலீடு அல்லது சிறு கால அவகாசம் கொண்ட டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதையும் பரிசீலிக்கலாம்.
பெண்கள் மட்டும் அல்ல, ஆண் குழந்தைகளுக்காகவும் இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வது அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த முதலீடாக அமையும். மொத்தத்தில், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பாதுகாப்பான திட்டமாக சுகன்யா சம்ரித்தி யோஜனாவும், அதிக வருமானம் தரும் வாய்ப்பு உள்ள மியூச்சுவல் ஃபண்டும் சிறந்த தேர்வுகளாக உள்ளன.