சென்னை: கடந்த வாரம் முழுவதும் கடும் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பவுனுக்கு ரூ.800 குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,300-க்கும் பவுன் ரூ. 600 உயர்ந்து ஒரு பவுண்டுக்கு 58,400-க்கும் விற்பனையானது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்க நகைகள் கிராம் ஒன்றுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 7,200 மற்றும் பவுனுக்கு ரூ. 800 சரிந்து ஒரு பவுன் ரூ.57,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 101-க்கு விற்பனையாகிறது.
காரணம் என்ன? கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் எதிரொலியாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றம் கண்டன. இதுவும் இன்று தங்கம் விலை குறைவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. வாரத்தில் தங்கம் விலை சரிவுடன் துவங்கியது நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.