அமெரிக்க மத்திய வங்கி நேற்றிரவு தனது வட்டி விகிதத்தைக் குறைத்தது. பொதுவாக இதுபோன்ற வட்டி குறைப்பு தங்கத்தின் விலையை உயர்த்தும். ஆனால், இம்முறை அதற்கு முற்றிலும் மாறாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760 ஆக விற்பனையானது. ஆபரணத் தங்கமும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220 ஆனது.
இந்த ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இதுவே முதல்முறை. ஆனால், 0.5% என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 0.25% மட்டுமே குறைக்கப்பட்டது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், 2026இல் ஒரே ஒரு வட்டி குறைப்பு மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டதால் சந்தையில் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டது.

வல்லுநர்கள் கூறுகையில், வட்டி குறைப்பு வரும் என முன்பே தெரிந்ததால் தங்க விலை ஏற்கனவே அதிகரித்து விட்டது. புவிசார் அரசியல் காரணங்களும் சேர்ந்து தங்கம் உச்சத்தை எட்டியது. ஆனால், குறைப்பு எதிர்பார்த்த அளவில் இல்லாததால் விலை குறைந்தது. இதனுடன், முதலீட்டாளர்கள் லாபத்தைப் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ததும் விலை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதன் விளைவாக தங்கம் விலை மேலும் 5 முதல் 7% வரை குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேவேளை, டாலர் மதிப்பு மற்றும் புவிசார் சூழ்நிலை அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.