
கடந்த ஆண்டு முழுவதும் உயர்வைச் சந்தித்த தங்கம் விலை, சமீபத்தில் தொடர்ந்து குறைந்துவரும் நிலை மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நகை வாங்க விரும்புவோருக்கு இது சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
உலகளாவிய பொருளாதார நிலைமைகள், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட அரசியல் பதற்றங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதி அதிக அளவில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கூடியது.

ஆனால் தற்போது உலக அரசியல் சூழல் நிதானமாக மீள தொடங்கியிருப்பதால், தங்கம் மீதான முதலீட்டு அழுத்தம் குறைந்து வருகிறது. இதனாலேயே கடந்த சில நாட்களாக தங்க விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது.
இன்று மே 15ம் தேதி நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.195 குறைந்து, ரூ.8610 ஆகும் நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ.1560 குறைந்து, ரூ.68,660க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8805, ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய விலை வீழ்ச்சி வர்த்தகர்களிடையேயும் நகை விரும்பிகளிடையும் புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.160 குறைந்து, தற்போது ரூ.7095க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் விலையும் ரூ.1280 குறைந்து, ரூ.56,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, தற்போது ரூ.108 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,08,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து இவ்வாறு குறைந்து வருவது, திருமண பருவத்தில் நகை வாங்க திட்டமிடும் மக்களுக்கு நன்மையாகும்.
தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையுமா அல்லது மீண்டும் ஏறுமா என்பது, உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் எப்படி மாறுகின்றன என்பதையே பொறுத்து உள்ளது.
இந்நிலையில் நகை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். மேலும் தங்கத்தின் விலை குறைந்துள்ள போதே முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.