சென்னை: தங்கம் விலை இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.68,080-க்கு விற்கப்பட்டது. இதனால் நகை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமும் அடைந்து வருகிறது.
கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின், படிப்படியாக அதிகரித்து, ரூ.64,440-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம், ஒரு பவுன் ரூ.67,400 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் நேற்று தங்கம் விலையும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி, ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து ரூ.8,510-க்கும், ஒரு பவுன் ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 24 காரட் சுத்தமான தங்கம் ரூ. 74,264-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை கிராம் ரூ.1 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 1,14,000 ஆக உள்ளது.