சென்னை: பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று (செப்டம்பர் 13) ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.
இன்று (செப்டம்பர் 14) தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இந்த வகையில் இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1280 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, கிராமுக்கு ரூ.6,865 ஆக உள்ளது.
அதேபோல், ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,920-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.97 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நிலையில், திடீரென தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வீட்டில் திருமணம் போன்ற விசேஷங்கள் இருப்பவர்களும், பண்டிகைக்கு நகை வாங்க நினைத்தவர்களும் தங்கம் விலை உயர்வால் கவலையடைந்துள்ளனர். தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்க நகை வியாபாரிகள் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் சாந்தகுமார் கூறுகையில், ”சர்வதேச அளவில், ஒரு பவுன் தங்கத்தின் விலை, 2,480 ரூபாயில் இருந்து, 2,570 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டில், வரும் நாட்கள் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது வரும் நாட்களிலும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.