தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது, முதலீட்டாளர் மத்தியில் பரபரப்பையும், பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வரி மற்றும் வர்த்தக போர் தொடர்பான பரபரப்பான முடிவுகள், பங்குச்சந்தையை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பொருளாதார நிபுணர்கள் இது கடந்த 16 ஆண்டுகளாக இல்லாத வீழ்ச்சியாக கருதி வருகிறார்கள்.

இந்த சூழலில், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து தங்களது முதலீடுகளை எடுத்து தங்கத்தில் மாற்றத் தொடங்கியதால்தான் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுக்கு விதித்த வரிகளை தற்காலிகமாக நிறுத்திய பிறகு பங்குச்சந்தை மீண்டும் ஓரளவுக்கு ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கத்தின் மீதான நம்பிக்கை குறையாததால் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகின்றது.
ஏப்ரல் 10ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,560 ஆக உயர்ந்தது. சவரனுக்கு விலை ரூ.1,200 உயர்ந்து, ரூ.68,480 ஆகப் பதிவாகியது. இதன் தாக்கம் இன்னும் நீடிக்க, ஏப்ரல் 11ஆம் தேதி ஒரு கிராமுக்கான விலை ரூ.185 உயர்ந்து ரூ.8,745 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7,245 ஆகவும், ஒரு சவரன் ரூ.57,960 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கூட ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.108 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,08,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெகு நாள்களுக்குப் பிறகு விலை இப்படிப் பெருமளவில் உயர்வது, நகைத் துறையிலும், முதலீட்டு சந்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். தங்கத்தின் எதிர்கால விலை நிலவரம் குறித்து மக்கள் மேலும் ஆர்வத்துடன் கவனம் செலுத்துகின்றனர்.