டிஜிட்டல் பேமென்ட் தளமான PhonePe, தனது பயனர்களுக்காக புதிய ஹோம் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு வருடத்திற்கு வெறும் ரூ.181 (GST உட்பட) மட்டுமே கட்டினால், 10 லட்சம் ரூபாயிலிருந்து 12.5 கோடி ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை பெறலாம்.

இத்திட்டம் தீ விபத்து, வெள்ளம், நிலநடுக்கம், திருட்டு, கலவரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அபாயங்களுக்கு எதிராக வீடுகள் மற்றும் அவற்றின் உள்பொருட்களை காப்பாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டு கடன் எடுத்தவர்களாக இருந்தாலோ இல்லாவிட்டாலோ யார் வேண்டுமானாலும் இந்த இன்சூரன்ஸை பெற முடியும். எந்த ஆவணங்களும் அல்லது சொத்து ஆய்வும் தேவையில்லை என்பதால் பயனர்கள் எளிதாக இந்த திட்டத்தைப் பெறலாம்.
ப்ரீமியம் தொகை ரூ.181-இல் துவங்குவதோடு, இயற்கை சீற்றங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட அபாயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொத்து மற்றும் விருப்பமான காப்பீட்டுத் தொகையை தெரிவித்து, PhonePe ஆப்பில் உள்ள இன்சூரன்ஸ் பிரிவின் மூலம் உடனடியாக பாலிசியைப் பெறலாம்.
PhonePe இன்சூரன்ஸ் புரோக்கிங் சேவைகளின் CEO விஷால் குப்தா தெரிவித்ததாவது, “மலிவு விலையில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஹோம் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குவதே எங்களின் நோக்கம்” என கூறினார். ஜூலை 2025 நிலவரப்படி PhonePe-க்கு 640 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் மற்றும் 45 மில்லியனுக்கும் அதிகமான வியாபாரிகள் இணைந்துள்ளனர். இன்சூரன்ஸ் மட்டுமின்றி கடன், செல்வ மேலாண்மை போன்ற பல்வேறு பொருளாதார சேவைகளையும் நிறுவனம் வழங்கி வருகிறது.