புதுடில்லி: செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கடனில் வாங்கும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஹோம் கிரெடிட் பைனான்ஸ்’ ஆய்வின்படி, மொத்த விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு சாதனங்கள் கடனில் விற்கப்படுகின்றன. டிராய் தரவுகளின்படி, நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் 1.16 கோடி மொபைல் இணைப்புகள் செயலில் உள்ளன.

இதனால், கடனில் வாங்கிய செல்போனுக்கான தொகையை திருப்பிச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. வாராக்கடன் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில், கடனை கட்டத் தவறினால் அந்த செல்போனை முடக்குவதற்கான அதிகாரத்தை நிதி நிறுவனங்களுக்கு வழங்க ஆர்.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
அதற்காக, கடனில் வாங்கப்படும் செல்போனில் நீக்க இயலாத செயலி ஒன்றை நிறுவுவார்கள். கடன் தவணையை செலுத்த தவறினால், அந்த செயலி வழியாக போன் செயலிழக்கச் செய்யப்படும். கடனை முழுமையாக கட்டிய பின் தான் மீண்டும் போன் இயங்கும். இதனால், நுகர்வோர் நிதி ஒழுக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த முடக்கப்பட்ட மொபைல் போன்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது. வாழ்வாதாரம், கல்வி, நிதிசார் சேவைகள் போன்ற அத்தியாவசிய பயன்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.