சென்னை: வருமான வரி தாக்கல் சீசன் மிகுந்த உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளான செப்டம்பர் 15 மீண்டும் நீட்டிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்யும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனுடன் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பங்களின் உதவியுடன் வரித்துறை தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது. வருமான வரியில் மோசடி அல்லது தவறான விலக்குகள் கோரப்படும் நிலைகளை கண்டு பிடிக்க, டிடிஎஸ், வங்கிப் பதிவு, படிவம் 26AS, வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) போன்ற தரவுகளை வரித்துறை ஆராய்ந்து வருகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்திருப்பதாவது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை, மருத்துவ காப்பீடு, வீட்டு வாடகை விலக்கு (HRA), கல்விச்செலவுகள், வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்றவற்றில் அதிகமாக விலக்குகள் கோருபவர்கள் மீது விசாரணை நடக்கிறது. சில இடங்களில் வரிச் சலுகைகள் கோரும் முறையில் சிஏ-க்கள், இடைத்தரகர்கள் மூலம் போலி தகவல்களை சமர்ப்பித்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே, சுமார் 150 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட தடயங்கள் அதிர்வலை எழுப்பியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் தங்கள் தவறான உரிமைகளை தாமாகவே திரும்பப் பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.1,045 கோடிக்கு மேற்பட்ட வரி விலக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. எனினும், இன்னும் பலர் விசாரணையில் ஒத்துழைக்காத நிலையில், வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது. மோசடியான தகவல்களை சமர்ப்பிப்பவர்கள் மீது 24% வட்டி, 200% அபராதம், மேலும் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், எந்தவொரு தவறான தகவலும் தப்பாது கண்டறியப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த கண்காணிப்புக்குள் வந்துள்ளனர். வருமான வரி தாக்கல் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பு இருந்தாலும், பொதுமக்கள் தங்கள் கணக்குகளை சரிபார்த்து, உண்மையான தரவுகளுடன் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில், வரித் தாக்குதல்களில் உண்மை மட்டுமே பாதுகாப்பு.