திருப்பூர்: அமெரிக்க வரி விதிப்பு தடைகளை தாண்டி நவம்பரில் ஏற்றம் கண்டுள்ளது இந்தியாவின் ஆடை ஏற்றுமதி என்று தகவல்க்ள வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ஆயத்த ஆடை கடந்த நவம்பர் மாதம் ரூ.11,320 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 11.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு உள்பட பல்வேறு தடைகள் இருந்த போதிலும் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்திய ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் இந்திய ஆடைகள் முக்கிய சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து செல்வாக்கு பெற்று வருவதை குறிப்பிடுகிறது.
நவம்பர் மாதத்தில் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டு கணக்கில் குறிப்பிடத்தக்க அளவில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
பாரம்பரிய வர்த்தகர்களை தாண்டி புதிய சந்தைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம், அமெரிக்க சந்தையில் பருவகாலம் மற்றும் சுங்க வரி தொடர்பான சவால்களை சமநிலைப்படுத்த உதவி செய்து, மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வட்டி சமநிலைப்படுத்தும் திட்டம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாது சந்தை அணுகல் தொடர்பான கடன் வசதிகள் போன்ற பிற வர்த்தக நிதி ஆதரவு நடவடிக்கைகளும் காலதாமதமின்றி அமல்படுத்தினால் ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறையும். அதன்மூலம் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.