தங்கம் மனிதர்களுக்கு பரம்பரை மங்களச் சின்னமாக இருந்து வருகிறது. இந்தியாவில் பண்டிகைகள், திருமணங்கள், விசேஷ நிகழ்வுகளில் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. இது பூமியில் அரிதாகக் காணப்படும் தனிமங்களில் ஒன்றாகும். விண்வெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும் போது தங்கம் உருவாகும் என்று நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் உலகளவில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பது பலருக்கு தெரியாததுதான்.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, இதுவரை உலகளவில் சுமார் 206,000 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், உலக தங்க கவுன்சில் அளித்த மதிப்பீட்டில் 238,000 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 45% நகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு, மீதியுள்ள அளவு நாணயங்கள் மற்றும் மத்திய வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது முழுமையான தகவலல்ல, ஏனெனில் இன்னும் நிலத்தடி வளங்களாக பல பகுதிகளில் தங்கம் புதைந்து கிடக்கிறது.
2024ஆம் ஆண்டில், சீனாவே உலகளவில் அதிக அளவில் தங்கத்தை தோண்டியெடுத்து சந்தைக்கு கொண்டு வந்த நாடாகும். ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அதிக தங்க வளங்கள் கொண்டவை. உலக தங்க கவுன்சில் தரவின்படி, 60,370 டன் தங்கம் தற்போது நிலத்தடியில் இருப்பதாகவும், இன்னும் சுமார் 145,000 டன் தங்கம் வளமாகக் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு தங்கம் பூமியில் இருப்பது என்பது குறித்து உறுதியான மதிப்பீடு எடுக்க இயலவில்லை.
பூமி உருவானபோது கிடைத்த தங்கத்தின் பெரும்பகுதி அதன் மையப்பகுதியில் மூழ்கி உள்ளது. மேலோட்டத்தில் காணப்படும் தங்கம் மிகக் குறைவாகவும், மிகவும் சிதறிய வகையிலுமானது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு 0.004 கிராம் மட்டுமே தங்கம் உள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் பூமியின் மேல்மட்டத்தில் 441 மில்லியன் டன் தங்கம் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் சுருக்கமான மதிப்பீடுகளே தவிர, துல்லியமாகக் கணிக்க இயலாதவை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.