இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது துணை நிறுவனமான SBI கார்டு மூலம் புதிய கூட்டு முயற்சியை வெளியிட்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார்டின் பெயர் “Indigo SBI Card”. விமானத்தில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு இது பலவிதமான நன்மைகளை வழங்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

Indigo SBI கார்டு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று பொதுவான Indigo SBI Card, மற்றொன்று Indigo SBI Card Elite. இந்தக் கார்டுகள் விமான முன்பதிவுகளிலும், கூட்டாளர் ஹோட்டல்கள் முன்பதிவுகளிலும் வெகுமதிகளை வழங்குகின்றன. Indigo Blue Chips வடிவில் வெகுமதிகள் வழங்கப்படும் என்றும், Elite கார்டின் மூலம் 7% வரை, சாதாரண கார்டின் மூலம் 3% வரை வெகுமதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Indigo கூட்டாளர் ஹோட்டல்கள் தவிர, பிற ஹோட்டல்கள் முன்பதிவில் Elite கார்டுக்கான 3% மற்றும் சாதாரண கார்டுக்கான 2% வெகுமதிகள் கிடைக்கும். மற்ற பரிவர்த்தனைகளில் Elite கார்டுக்கு 2% மற்றும் சாதாரண கார்டுக்கு 1% வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் தங்களது செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்.
SBI கார்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் படி, Elite கார்டு வாங்குபவர்களுக்கு வரவேற்பு நன்மைகளாக 5,000 Indigo Blue Chips மற்றும் 6E Eats வவுச்சர் கிடைக்கும். வருடாந்திர புதுப்பித்தல் கட்டணம் பொதுவான கார்டுக்கு 1,499 ரூபாய், Elite கார்டுக்கு 4,999 ரூபாய். இந்த கார்டுகள் மாஸ்டர் கார்டு மற்றும் ரூபே கட்டண தளங்களில் பயன்படுத்தலாம். விமானங்கள், ஹோட்டல்கள் மற்றும் கூடுதல் சலுகைகளுக்கு உங்கள் அருகிலுள்ள SBI கிளையை தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.