சவுத் இந்தியன் வங்கியானது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய டிஜிட்டல் ஓவர் டிராஃப்ட் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Ark Neo Financial Services நிறுவனம் நடத்தும் DhanLap என்ற பிளாட்பார்ம் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. முதலீட்டு மதிப்பை பாதிக்காமல் உடனடி பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த லோனுக்கு எந்த ஆவணங்களையும் நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லை. PAN கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் மூலம் KYC சரிபார்ப்பை முடித்தவுடன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஓவர் டிராஃப்ட் தொகை வழங்கப்படும். 18 முதல் 75 வயதுவரையிலான நபர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். வங்கியின் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் இதனைப் பெற முடியும் என்பது சிறப்பு.
மியூச்சுவல் ஃபண்டின் வகைப்படி கடன் வழங்கும் அளவும் மாறுபடும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு முதலீட்டின் 50% வரை, டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு 70% வரை கடன் வழங்கப்படும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களின் நீண்டகால முதலீட்டு இலக்குகளை பாதிக்காமல் குறுகியகால நிதி தேவைகளை நிறைவேற்றலாம்.
கேரளாவை தளமாகக் கொண்ட சவுத் இந்தியன் வங்கி, இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். இதன் பங்குகள் மும்பை பங்கு சந்தை (BSE) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் பாதுகாப்பான நிதி சேவையை வழங்கும்.