கடன் பெறும் போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகமாக கவனிக்கும் விஷயம் கிரெடிட் ஸ்கோர் ஆகும். இது நம் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் ஒரு மதிப்பீடு. இருப்பினும், இந்த கிரெடிட் ஸ்கோர் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய தவறான புரிதல்கள் பலரிடமும் பரவியுள்ளன. சிலர் கூட அதிக வருமானம் இருந்தால் நல்ல ஸ்கோர் கிடைக்கும் என்று நம்புகின்றனர், ஆனால் உண்மையில் வருமானம் கிரெடிட் ஸ்கோரில் எந்த விதமான தாக்கமும் இல்லை. நேர்மையான கட்டணம் செலுத்தும் பழக்கமே முக்கியம்.

சிலர் தங்களின் கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி சரிபார்த்தால் அது குறையும் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. நாமே பார்க்கும் சரிபார்ப்பு ‘சாஃப்ட் என்கொயரி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்கோரில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக, சீராகச் சரிபார்ப்பதன் மூலம் பிழைகளை கண்டறிந்து திருத்திக்கொள்ளலாம். இதனால் ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க இயலும்.
மேலும், கடன் வாங்காதவர்களுக்கு சிறந்த கிரெடிட் ஸ்கோர் கிடைக்கும் என்பதும் தவறான நம்பிக்கையே. கடன் வரலாறு இல்லையெனில், நீங்கள் கடனை எவ்வாறு நிர்வகிப்பீர்கள் என்ற ஆதாரம் வங்கிகளிடம் கிடையாது. இதனால் கடன் வழங்குநர்கள் உங்களைப் பற்றி தயக்கத்துடன் அணுகலாம். அதேசமயம், இந்தியாவில் CIBIL, Experian, CRIF High Mark மற்றும் Equifax போன்ற பல பியூரோக்கள் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுகின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி முறைகளைப் பின்பற்றுவதால், ஸ்கோர்கள் மாறுபட வாய்ப்பு உண்டு.
மற்றொரு தவறான புரிதல், கிரெடிட் கார்டை மூடிவிட்டால் பழைய தவறுகள் அழிந்து விடும் என்பது. உண்மையில், கார்டை மூடிய பிறகும் உங்களுடைய கடன் வரலாறு தொடர்ச்சியாக ரிப்போர்ட்டில் இருக்கும். தாமதமான கட்டணம், தவறுகள், அல்லது நல்ல வரலாறு எதுவாயினும் பல ஆண்டுகள் பதிவு செய்யப்படும். எனவே கிரெடிட் ஸ்கோரின் உண்மையை அறிந்து கொண்டு நிதி முடிவுகளை எடுப்பது மிக முக்கியமானது.