நாமக்கல்: புதிய விதிமுறைகளின்படி ஓமன் மற்றும் கத்தார் நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியை துவக்க உள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாமக்கல் பகுதியில் உற்பத்தியாகும் முட்டை உள்ளூர் சந்தைக்கு மட்டுமின்றி ஓமன், பஹ்ரைன், கத்தார், துபாய், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், கத்தாரில் முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளால், அந்நாட்டின் முட்டை ஏற்றுமதி, 50 சதவீதம் குறைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஓமனும், இந்திய முட்டைகளை புதிய இறக்குமதிக்கு அனுமதிப்பதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களில் இருந்து ஓமன் நாட்டுக்கு அனுப்பப்பட்ட 45 கன்டெய்னர்களில் இருந்த முட்டைகள் துறைமுகத்திலும், நடுக்கடலிலும் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது: ஓமன் நாட்டுக்கு மாதந்தோறும் 150 முதல் 200 கன்டெய்னர்களில் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஓமனின் இறக்குமதி கட்டுப்பாடுகளால் முட்டை ஏற்றுமதியில் சிக்கல்கள் எழுந்தன.
இப்பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வலியுறுத்தி, எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு ஓமன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முட்டைகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. ஓமன் நாட்டின் புதிய விதிமுறைகளின்படி ஜனவரி முதல் முட்டை ஏற்றுமதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 60 கொள்கலன்களில் 3 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 60 கிராம் எடையுள்ள முட்டைகளை மட்டுமே சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை கத்தார் அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 50 முதல் 55 கிராம் எடையுள்ள முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் 60 கிராம் எடை கொண்ட முட்டைகளை கத்தாருக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கத்தார், ஓமன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் தேக்கமடைந்தாலும், வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதால் நஷ்டம் ஏற்படவில்லை என்றார்.
நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில், தினமும், மொத்தம், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவுத் திட்டம், வெளிச்சந்தையில் விற்பனை, வெளி மாநில விற்பனை ஆகியவற்றுக்கு முட்டை வழங்கப்படுகிறது.