புதுடில்லி: வலுவான ஜூன் காலாண்டு வளர்ச்சி மற்றும் உள்நாட்டு தேவையின் அதிகரிப்பு காரணமாக, இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாக அமெரிக்க கடன் மதிப்பீட்டு நிறுவனம் பிட்ச் ரேட்டிங்ஸ் அறிவித்துள்ளது. இதன் படி, 2025-26 நிதியாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்–ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் எனும் சாதனையை எட்டியுள்ளது. இதன் தாக்கத்தால், வரவிருக்கும் மாதங்களிலும் வளர்ச்சி சீரான நிலையில் தொடரும் என்றும், உள்நாட்டு நுகர்வோர் செலவினமே முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பிட்ச் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் நுகர்வை ஊக்குவித்து, முதலீட்டை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி போன்ற உலகளாவிய வர்த்தக சிக்கல்கள், அக்டோபர்–மார்ச் காலத்தில் வளர்ச்சியை சற்றே மந்தமாக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வலுவான வருமானமும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் பொருளாதாரத்தை சீராக முன்னேற்றும் என கூறப்பட்டுள்ளது.
2026-27 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாகவும், 2027-28ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாகவும் இருக்கும் என பிட்ச் கணித்துள்ளது. மொத்தத்தில், உலக பொருளாதார சவால்களையும் தாண்டி, இந்தியா வலுவான வளர்ச்சி பாதையில் தொடரும் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.