36 வயதான பிரதீக் சூரி ஆப்பிரிக்காவில் வாழும் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் இளைய இந்திய பில்லியனராக அறியப்படுகிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான மேசர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
பிரதீக் டெல்லியில் பிறந்தவர். புதுடெல்லியின் பரகாம்பா சாலையில் உள்ள மாடர்ன் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை முடித்தபின் 2006 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றார். அங்கே BITS பிலானியில் இயந்திர பொறியியலில் பட்டம் பெற்ற பின்னர் வேலை செய்தார். 2012 ஆம் ஆண்டில் மலிவு விலையில் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் மேசர் நிறுவனத்தை தொடங்கி அதனை உலகளாவிய அளவில் பரப்பினார்.
மிகக் குறுகிய காலத்தில் மேசர் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்மார்ட் டிவி ஆப்பிரிக்க சந்தையில் பெரும் வெற்றி பெற்றது. ஒரே நேரத்தில் 800,000 யூனிட் விற்பனை சாதனையை எட்டியது. இதனால் நிறுவனத்தின் மதிப்பு ரூ.44,385 கோடியை (அமெரிக்கா மதிப்பில் $1.9 பில்லியன்) அடைந்தது.
பிரதீக் சூரியின் வெற்றி கதை, தொழில்முனைவோருக்கு ஒரு முன்னோடி மாதிரியாக உள்ளது. குறுகிய காலத்திலும் வணிக துறையில் சாதனை படைத்தவர். இவரின் செயல்பாடுகள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் பரவியுள்ளன.