டெல்லி அல்லது மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் 2025ஆம் ஆண்டில் 2 அல்லது 3 BHK வீடு வாங்குவதற்கு சுமார் 1 கோடி ரூபாய் செலவாகிறது. ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டிருப்பது பொருளாதார பாதுகாப்பு மட்டுமின்றி கலாச்சாரப் பெருமையையும் குறிக்கிறது. வேலை காரணமாக இடம்பெயரும் நபர்கள் வாடகை எடுக்கலாமா அல்லது வீடு வாங்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். மாதாந்திர செலவில் அதிகப் பகுதியை வாடகைக்கு செலவழிப்பது நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது. இதை தெளிவுபடுத்த, 1 கோடி மதிப்பிலான வீட்டை 20 வருடங்களுக்கு வாடகைக்கு எடுப்பதா அல்லது EMI செலுத்தி வாங்குவதா என்ற பொருளாதார மதிப்பீடு பார்க்கலாம்.

ஒரு வீட்டை வாங்கும் போது, முதலில் 20 சதவீதமான 20 லட்சம் ரூபாய் டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும். மீதமிருக்கும் 80 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி, 20 வருட காலத்திற்கு மாதம் சுமார் 69,426 ரூபாய் EMI செலுத்த வேண்டி வரும். வட்டி விகிதம் 8.5 சதவீதம் எனக் கொண்டால், 20 ஆண்டுகளில் மொத்த வட்டி மட்டும் 86.6 லட்சம் ரூபாயாகும். இதனால் மொத்த செலவு டவுன் பேமெண்ட், கடன் தொகை மற்றும் வட்டியை சேர்த்து சுமார் 1.86 கோடி ரூபாயாகும். ஆனால் வீட்டின் விலை ஆண்டுதோறும் 6 சதவீதம் அதிகரிக்கும் எனக் கொண்டால், 20 ஆண்டுகள் முடிவில் அந்த வீடு சுமார் 3.21 கோடி ரூபாய் மதிப்பை அடையும்.
மாறாக, 1 கோடி மதிப்புள்ள வீட்டை வாடகைக்கு எடுப்பதாகக் கருதினால், ஆரம்பத்தில் மாதம் 40,000 ரூபாய் செலவாகும். ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அதிகரித்தால், 20 ஆண்டுகள் கழித்து மாத வாடகை 2.65 லட்சம் ரூபாயை மீறிவிடும். 20 ஆண்டுகள் முழுவதும் செலுத்த வேண்டிய வாடகை சுமார் 2.75 கோடி ரூபாய் ஆகும். இதற்கு பின் எந்த சொத்தும் கையில் இருக்காது.
ஆகவே நீண்ட கால பார்வையில் பார்க்கும்போது, வீடு வாங்குவது சிறந்த தேர்வாகும். ஏனெனில் அதிக செலவு இருந்தாலும், அது இறுதியில் சொத்தாக உங்களிடம் இருக்கும். ஆனால் உங்கள் வருமானம், வாழ்க்கை முறை, வேலை நிலைமை ஆகியவற்றைப் பொறுத்தே சரியான முடிவு எடுக்க வேண்டும்.