இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 696.66 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இது 2024ம் ஆண்டு செப்டம்பரில் பதிவான மிக உயர்ந்த அளவான 704.885 பில்லியனை நெருங்கும் நிலையில் உள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், இந்தியா தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த அந்நியச் செலாவணி கையிருப்பு சாதனையை மீண்டும் அடையும் வாய்ப்பு உள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பையும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த வாரத்தில் அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு 3.47 பில்லியன் டாலர் உயர்ந்து 587.69 பில்லியன் டாலராகும் அளவுக்கு சென்றுள்ளது. யூரோ, பவுண்ட், யென் போன்ற நாணயங்களின் மதிப்பின் மூலம் இது ஏற்பட்டுள்ளது. அதனுடன், தங்கத்தின் மதிப்பும் 1.6 மில்லியன் டாலர் உயர்ந்து 85.89 பில்லியன் டாலராக உள்ளது. புவிசார் அரசியல் சூழ்நிலைகளால், தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக மத்திய வங்கிகள் பெரிதும் கையாண்டுவருகின்றன.
இந்த வாரத்தில் சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) மதிப்பு 102 மில்லியன் டாலர் உயர்ந்து 18.67 பில்லியனாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் இருப்பு 14 மில்லியன் டாலர் உயர்ந்து 4.4 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் எல்லாம் நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும் வகையில் உள்ளன. கடந்த வாரம் இது 691.5 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரெப்போ வட்டி 5.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை தரும் முடிவாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார நிலைமை பூரண நம்பிக்கையுடனும், வளர்ச்சியுடனும் முன்னேறி வருகின்றது.