சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது. தொழில்துறை வளர்ச்சிதான் இதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு புதிய தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு துறைகளில் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ.1,937.76 கோடி மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் உற்பத்தித் துறை, பொறியியல், வடிவமைப்பு, தொழில்நுட்பம், ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உணவு வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் பலனடையும்.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விவரங்களை பகிர்ந்துள்ளார். புதிய முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் சுமார் 13,409 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு எப்போதுமே முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க முனைந்து வருகிறது. இதற்காக ஒரே ஜன்னல் முறை, வேகமான அனுமதி வழங்கும் திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு சிறந்த உட்கட்டமைப்பு ஆகியவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் முன்னணி தொழில்துறை மையமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே உலகளவில் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஐடி துறைகள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. புதிய முதலீடுகள் இந்த துறைகளுக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தை இந்தியாவின் தொழில் தலைநகரமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்துறை வளர்ச்சியால் மாநில வருவாய் அதிகரிப்பதோடு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும் பெருகும்.
தமிழகத்தின் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு இம்மாதிரி முதலீட்டு ஒப்புதல்கள் மிகப்பெரிய பலன்களை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.