சேலம் மாவட்டம் வெள்ளி கொலுசு உற்பத்திக்கு பெயர் பெற்ற பகுதியாக விளங்குகிறது. இங்கு தயாராகும் வெள்ளி கொலுசுகள் நாடு முழுவதும் விற்பனையாகி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன. குறிப்பாக செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றாண்டுகளாக இந்தத் தொழில் வளர்ந்து, சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

இந்த கொலுசுகள் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் சேலத்தின் வெள்ளி பட்டறைகளுக்கு தேசிய மட்டத்தில் தனி அடையாளம் உண்டு. ஆனால் இன்று மட்டும் அந்த பட்டறைகள் அனைத்தும் இயங்காமல் இருந்தன.
கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்றபோது, கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட துயர சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அந்த நிகழ்வு தமிழக மக்களை உலுக்கியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (செப்டம்பர் 29) சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தி வளர்ச்சி நிறுவனம், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் காலை முதல் மாலை வரை வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொதுநலச் சங்க மாநிலத் தலைவர் ஜெகன் அறிவிப்பு வெளியிட்டார்.