மத்திய வங்கி தலையீடு, அதிகரித்து வரும் இறக்குமதிகள், குறைந்த ஏற்றுமதி வருவாய், பணவீக்க விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை பல நாடுகளில் நாணய மதிப்பு குறைவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. உலக சந்தையில் வலுவான நாணயங்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் நிலையில், பலவீனமான நாணயங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன.

இந்த சூழலில், சில நாடுகளில் ஒரு இந்திய ரூபாய் நூற்றுக்கணக்கான அந்நாட்டு நாணயத்துக்கு சமமாகிறது. இது அங்குள்ள மக்களின் பொருளாதார பலவீனத்தையும், அரசியல் நிலையற்ற தன்மையையும் காட்டுகிறது. நாணய மதிப்பு குறைந்து விட்டால், அந்த நாட்டின் பொருளாதாரம் அந்நியச் செலாவணி மீது அதிகமாக சார்ந்திருக்கும்.
ஈரானின் ரியால் உலகின் மிகக் குறைந்த மதிப்புள்ள நாணயங்களில் ஒன்றாகும். நீண்டகால பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் சிக்கல்கள் காரணமாக, இன்று ஒரு இந்திய ரூபாய் சுமார் 490–500 ரியாலுக்கு சமம். அதேபோல், வியட்நாமின் டாங் குறைந்த மதிப்புள்ள நாணயங்களில் ஒன்றாகும். சுமார் 300 டாங் ஒரு ரூபாய்க்கு சமம். இதை அரசாங்கம் ஏற்றுமதிக்கு ஆதரவாக வைத்துள்ளது.
இந்தோனேஷியாவின் ருபியாவும் பலவீனமான நாணயமாகவே கருதப்படுகிறது. 1 ரூபாய் சுமார் 185–190 ருபியாவிற்கு சமம். அதேபோல், லாவோஸின் கிப் உலகின் மிகவும் குறைந்த மதிப்புள்ள நாணயங்களில் ஒன்றாகும். ஒரு ரூபாய் அங்கே 250–260 கிப்பிற்கு சமம். சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாடு குறைந்த செலவிலான இடமாக இருக்கிறது.
மேலும், கினியாவின் பிராங்க் கூட பலவீனமான நாணயங்களில் ஒன்று. இயற்கை வளங்கள் அதிகம் இருந்தாலும், அரசியல் குழப்பம் மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக, ஒரு ரூபாய் சுமார் 100 பிராங்கிற்கு சமமாக உள்ளது.
இந்திய ரூபாயின் வலிமை உலகில் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், உலக பொருளாதார சூழ்நிலைகளின் அடிப்படையில் நாணய மதிப்பில் இடையிடையே மாற்றங்கள் ஏற்படுகின்றன.