தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகு விலை உயர்ந்ததால், சில உணவகங்களில் டீ, காபி விலையும் உயர்ந்துவிட்டது.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போர் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் பற்றாக்குறையாக உள்ளதால், உணவகங்களில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
தஞ்சாவூரிலுள்ள பல உணவகங்களில் கையிருப்பில் இருந்த சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டதால், விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர். இதனால், தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறகு விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது.
இதனிடையே, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டாலும், சில இடங்களில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், ரூ. 1,750}க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது.
விறகு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுகட்ட டீ, காபிக்கு மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மற்ற உணவு வகைகள் வழக்கமான விலையில் வழங்கப்படுவதாகவும் தேனீரக உரிமையாளர் சபீக் அகமது தெரிவித்தார். இந்த விலை உயர்வு காரணமாக சில உணவகங்கள், தேநீர் கடைகள் சில நாட்களாக மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உணவகங்களுக்கு விறகுகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், நாட்டு மரங்களின் வரத்து குறைவாக இருப்பதால், உணவகங்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாக விறகுகள் வழங்க முடியாத நிலை ஏற்படும் என விறகு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.