பொருளாதார அவசரங்கள் என்பது எச்சரிக்கையின்றி நேரும் ஒரு திடீர் நிஜம். மருத்துவச் செலவுகள், திருமண விழாக்கள், கல்விச் செலவுகள் அல்லது வீட்டு மேம்பாட்டு பணிகள் போன்ற எந்தத் தேவைக்கும் நம்மால் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், அடமானமின்றி பெறக்கூடிய பர்சனல் லோன் திட்டங்கள் நமக்கு பெரும் நிவாரணமாக அமைகின்றன.

பல வங்கிகள் 7 ஆண்டுகள் வரையிலான நீளக்காலக் கடனை வழங்கி வருகின்றன. உதாரணமாக, யூனியன் பேங்க் 50 லட்சம் ரூபாய் வரை கடனை நிலையான வட்டியுடன் வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கியில் 40 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம்; இங்கு வட்டி விகிதம் 9.99% முதல் 22% வரை இருக்கும். பேங்க் ஆஃப் இந்தியா 25 லட்ச ரூபாய் வரை கடனையும் 84 மாதங்கள் (அதாவது 7 ஆண்டுகள்) திருப்பிச் செலுத்தும் வசதியையும் வழங்குகிறது.
பர்சனல் லோன் பெற, அடையாளச் சான்றாக பான் கார்டு, ஆதார், ஓட்டுநர் உரிமம் தேவைப்படும். முகவரி சான்றாக மின்சார ரசீது அல்லது பாஸ்போர்ட் மற்றும் வருமான சான்றாக சேலரி ஸ்லிப் அல்லது ITR போன்ற ஆவணங்கள் தேவைப்படும். வங்கிகள், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமான நிலையைப் பார்த்துத்தான் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். 750க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டியில் கடன் பெற வாய்ப்பு அதிகம்.
7 வருடங்கள் என்பது மாத தவணையைச் சுலபமாக செலுத்த முடியும் என்பதற்காக தான் பலர் தேர்வு செய்கிறார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு கடன் கொண்டிருந்தால், ஒருங்கிணைந்த வட்டி தொகை அதிகமாகும். எனவே நீளமான கால அவகாசத்தைத் தேர்வுசெய்யும்போது, வட்டி செலவினத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்ட முறையில் தவணைகளை செலுத்தி நம்பகமான கடனாளராக இருப்பது, எதிர்கால நிதிச் சவால்களை எதிர்கொள்ளும் போது பெரும் உதவியாக இருக்கும்.