புதுடில்லி: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வந்த நிலையில், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன், “வர்த்தகம் இப்போது ஆயுதமாக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி” எனக் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் கொள்கை காரணமாக, அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் அடிப்படை வரி மற்றும் 25 சதவீதம் அபராத வரி என மொத்தம் 50 சதவீதம் விதித்துள்ளார். இதனால், இந்தியா மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

“இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. ஒரே ஒரு வர்த்தக கூட்டாளியையே சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. எந்த நாட்டையும் முழுமையாக சார்ந்து இருக்கக் கூடாது. குறிப்பாக, ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் குறித்து நம் நாடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என ராஜன் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், “சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும், ஏற்றுமதியாளர்கள் கூடுதல் வரி சுமையைச் சுமக்கின்றனர். பயன்கள் குறைவாக இருந்தால், இந்த கொள்முதலைத் தொடர வேண்டுமா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். நமது ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்த வேண்டும். சீனா, ஜப்பான், அமெரிக்கா யாருடனும் இணைந்து பணியாற்றலாம். ஆனால் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. தன்னம்பிக்கையுடன் மாற்று வழிகளைத் தேடிக் கொள்ள வேண்டும்,” என்றார்.
இந்த நடவடிக்கை, குறிப்பாக விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் போன்ற சிறு ஏற்றுமதியாளர்களை பாதிக்கும் என்றும், அவர்களது வாழ்வாதாரம் ஆபத்தில் ஆழ்த்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், இந்த வரிவிதிப்பு அமெரிக்க நுகர்வோருக்கும் தீங்காகும்; அவர்கள் பொருட்களை 50 சதவீதம் கூடுதலாக செலுத்தி வாங்க வேண்டிய நிலை உருவாகும் என ராஜன் தெரிவித்தார்.