சமையலுக்கு அத்தியாவசியமான உப்பின் உற்பத்தியில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய உப்பு உற்பத்தியாளராக உள்ளது. ஆனால், நாட்டில் அதிகம் உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது என்பதை பலர் அறியவில்லை.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உப்பில் 75%க்கும் மேற்பட்டவை குஜராத்திலிருந்து தான் வருகிறது. அங்குள்ள தனித்துவமான புவியியல் சூழ்நிலைகள் – அதிக வெப்பம், வறண்ட காலநிலை மற்றும் கடலோர பகுதிகள் – உப்பு உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன. குறிப்பாக, ரான் ஆஃப் கட்ச் (Great Rann of Kutch, Little Rann of Kutch) பகுதிகள் உலகப் புகழ்பெற்ற உப்பு உற்பத்தி மையங்களாகும்.

குளிர்காலத்தில், பருவமழை முடிந்ததும், இந்த விரிந்த சமவெளிகள் வெயிலில் உலர்ந்து அடர்த்தியான உப்பு படிகங்களாக மாறுகின்றன. ரான் ஆஃப் கட்ச் தவிர, பாவ்நகர், சுரேந்திரநகர், ஜாம்நகர், போர்பந்தர் போன்ற குஜராத் கடலோரப் பகுதிகளிலும் மிகுந்த அளவில் உப்பு தயாரிக்கப்படுகிறது.
குஜராத்தில் உற்பத்தியாகும் உப்பு இந்தியாவின் பெரும்பாலான சமையலறைகளில் பயன்படுத்தப்படுவதோடு, தொழில்துறை தேவைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு குஜராத்தின் உப்பு உற்பத்தி மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது. குஜராத் தவிர, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.