புதுச்சேரி: மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது:- அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததால், வரும் 10-ம் தேதி முதல் மறுதேர்வு நடத்த கல்வித்துறை அறிவிப்பு செய்து அட்டவணை வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக புதுச்சேரி அரசு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது 3ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடத்தி அதில் தோல்வி அடையும் மாணவர்களை படிப்பில் இருந்து படிப்படியாக வெளியேற்றும். இதன் மூலம் சமுதாயத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஏழை மக்கள் கல்வியை விட்டு உடல் உழைப்புக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவும், படித்த மேல்தட்டு மற்றும் வசதி படைத்தவர்களும் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலையாட்களாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் தான் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இந்த புதிய கல்வி திட்டத்தை எதிர்த்து, திட்டத்திற்காக போராடுகிறோம்.

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களின் 9 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்திருப்பது எங்களின் நிலைப்பாடு உண்மை என்பதையே காட்டுகிறது. இந்த இடைநிற்றலை ஊக்குவிப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். ஆனால், அரசை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சத்தில் புதுச்சேரி அரசு மறுதேர்வு நடத்த இந்த முடிவை எடுத்துள்ளது. இல்லையேல் எதிர்வரும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தேவையான மாணவர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட நான்கு ஆண்டுகளாக இந்த நிலை ஏற்படும் என்றும், அதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், ஆசிரியர்களுக்கு முறையான தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இவை எதையும் செய்யாத இந்த அரசு, தேர்வு தோல்வியை மறைக்க மறுதேர்வு நாடகம் ஆடுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அறிகிறோம். எனவே கல்வித்துறை தேர்வில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கையை முதலில் வெளியிட வேண்டும். தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மறுதேர்வு நடத்த கால அவகாசம் வழங்க வேண்டும்.
மாறாக அவசர அவசரமாக தேர்வை நடத்தி மதிப்பெண்களை நீங்களே விநியோகித்து கணக்கை காட்டினால் அடுத்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். எனவே, இதில் உள்ள முழு உண்மையையும் வெளிப்படைத் தன்மையுடன் அரசு வெளியிட வேண்டும். மேலும், மத்திய பாஜக அரசின் புதிய கல்வித் திட்டத்தை அவசர அவசரமாக அறிமுகப்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் செயல் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு சிவா கூறினார்.