சென்னை: ஓர் உணவை நாம் எப்போது ரசித்து, ருசித்துச் சாப்பிடுவோம்? முதலில் அது சுவையாக இருக்க வேண்டும். அதைச் சாப்பிடும்போது, எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது.
அதாவது, அதை வாயில் வைத்து, பற்களால் மென்று, நாக்கால் ருசித்து விழுங்கும் போது, சாப்பிட முடியாமல் வாயில் வலியோ, புண்ணோ இருக்கக் கூடாது. அப்போதுதான் அமிர்தமாகவே இருந்தாலும், அது ருசிக்கும். இல்லை என்றால், `கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்பதுபோல, பிடித்த உணவு தட்டில் இருந்தும், வாய்ப்புண்ணின் காரணமாக, அதைச் சாப்பிட முடியாமல் போகும்.
வெறும் பசிக்காக மட்டுமே வேண்டா வெறுப்போடு உள்ளே தள்ளவேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலும், வாய்ப்புண்கள் சரியான உணவின் மூலமாக அல்லது ஒரு வாரத்துக்குள் தானாகவே குணமாகிவிடும். ஆனால், சில வகைப் புண்கள் வாயிலேயே தங்கி, பாடாகப்படுத்தி எடுத்துவிடும். `சில வாய்ப்புண்கள் மற்ற நோய்கள் நமக்கு இருப்பதற்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்’ என எச்சரிக்கிறார்கள்
மருத்துவர்கள். வாய்ப்புண் வெகு நாள்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, அலட்சியமாக இருக்காமல், புண் ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து, சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
எல்லாவிதமான வாய்ப்புண்களுமே தவிர்க்க முடியாததோ, தீர்க்க முடியாததோ அல்ல. அதோடு, ஆயுர்வேதத்தில் வாய்ப்புண் தொந்தரவுக்காக மேற்கொள்ளப்படும் பல எளிய சிகிச்சை முறைகள், எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்கள் மூலம் குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தொடக்கத்தில், வாய்ப்புண்கள் கொப்புளங்களாகத் தோன்றும். சில நாள்களில் உடைந்து, சிறு சிறு குழிப்புண்களாக மாறி, வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். தலைவலி, காய்ச்சல் எனத் தொல்லைகளை உண்டாக்கும்.