விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ், “பாமக கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான்” என மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். தனது அனுமதி இல்லாமல் பாமக தலைவர் அன்புமணி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அவர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் கட்சி விதிகளுக்கு எதிரானவை என்றும் கூறியுள்ளார். அன்புமணி தலைமையில் பாமகவில் எந்த அணியும் இல்லை என்றும், அவர் செயல் தலைவர் என்றபோதிலும், அதிகாரபூர்வமாக கட்சியின் தலைவர் என்ற உரிமை அவருக்கு கிடையாது என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

சென்னை மற்றும் அதன் புறநகரான தைலாபுரம் தோட்டத்தில் 2025 மே 20 முதல் பாமக தலைமையகம் இயங்கி வருகின்றது. இதைத் தவிர வேறு எங்கேயும் பாமக அலுவலகம் உள்ளது என்று கூறப்படுவது சட்டவிரோதமானது என்றும், அந்தப் பெயரையும், கட்சி கொடியையும் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். பனையூரில் பாமக அலுவலகம் இருக்கிறது எனக் கூறுவதே தவறு என்றும், அந்த பெயரில் நடந்த அனைத்துப் பணிகளும் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், அன்புமணி நடத்திய பயணத்தை தடுக்கும் வகையில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பயணம் வட தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். மேலும், அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் பாமகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கருவி இங்கிலாந்து அல்லது பெங்களூரில் இருந்து வர்த்தக முறையில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் கூறிய அவர், அதன் பின்னணியில் உள்ளதைக் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.