மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி, சன்னியாசிகளுடன் கூட்டாக கும்பமேளா நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கும்பமேளா நடைபெறும் இடங்களில் டீ கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பூக்கடைகள் அமைப்பதற்கு இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் அசுத்தமான செயல்களில் ஈடுபடுவார்கள். கும்பமேளா சுத்தமாகவும், புனிதமாகவும் நடைபெற வேண்டும். இதை காக்க இது அவசியம்” என தெரிவித்தார்.
மஹந்த் ரவீந்திர புரியின் இந்த கருத்து சமூகத்தில் வன்முறைக்கும், பிரிவினைக்கும் வழிவகுக்கும் என்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது. “இத்தகைய நடவடிக்கைகள் சமுதாயத்திற்குள் பிரிவினை உருவாக்கும்,” என்று அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கூறினர்.
அதேசமயம், சமீபத்தில் பிரதமர் மோடி, “கும்பமேளா வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக இருக்க வேண்டும்” என்று கூறிய நிலையில், மஹந்த் ரவீந்திர புரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, இந்திய கலாச்சாரத்தின் பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இதனால், சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக அனைத்து தரப்பினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கும்பமேளா என்பது ஹிந்துக்களின் முக்கியமான ஆன்மிக திருவிழா. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பிரயாக்ராஜ், உஜ்ஜயினி, நாசிக் மற்றும் ஹரித்வார் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.