பாலக்காடு: தெய்வத்தின் அருளைப் பெற்றதாக பக்தர்களால் போற்றப்படும் ‘பத்மநாபன்’ யானைக்கு நேற்று கோயில் வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், கோயிலின் புகழ்பெற்ற யானை ‘பத்மநாபன்’ நோய்வாய்ப்பட்டு இறந்தது. இந்த யானை பக்தர்களால் மிகவும் மதிக்கப்பட்டு போற்றப்படுகிறது. நினைவுச்சின்னமாக கோயில் வளாகத்தில் ஒரு சிலை நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் யானையின் நினைவாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு, யானையின் நினைவுச் சடங்கு காலை 8:00 மணிக்கு தொடங்கியது. கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ‘இந்திரசென்’, ‘சங்கரநாராயணன்’ மற்றும் ‘கஜேந்திரா’ ஆகிய மூன்று யானைகள், பத்மநாபனின் சிலைக்கு முன் மலர் மழை பொழிந்து, கைகளை உயர்த்தி, அஞ்சலி செலுத்தின.
தேவஸ்தான நிர்வாகக் குழுத் தலைவர் விஜயன் மற்றும் குழு உறுப்பினர்கள் மனோஜ், நிர்வாகி வினய் மற்றும் ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் மலர் மழை பொழிந்து, பத்மநாபனுக்கு அஞ்சலி செலுத்தி, கடவுளின் அருளைப் பெற பிரார்த்தனை செய்தனர்.