பாகற்காய் என்றால் பலருக்கும் கசப்பாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பாலக்காடு ஸ்டைலில் எள்ளுடன் சேர்த்து செய்யப்படும் இந்த எளிய மற்றும் பாரம்பரிய கறி அந்த எண்ணத்தையே மாற்றி விடும். எள்ளின் நறுமணமும், வெல்லத்தின் லேசான இனிப்பும் இந்தக் கறிக்கு ஒரு தனித்துவ சுவையை அளிக்கிறது. சாதம், சப்பாத்தி அல்லது தோசையுடன் இந்தக் கறியைச் சேர்த்தால் வாய்க்கரைய சுவை அனுபவிக்கலாம்.

இந்தக் கறிக்குத் தேவையானவை பாகற்காய், எள், புளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விதை, மஞ்சள் தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு, உப்பு மற்றும் வெல்லம். முதலில் பாகற்காயை நன்கு நறுக்கி வைக்க வேண்டும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எள்ளை வறுத்து நன்கு பொடியாக அரைக்கவும்.
அதனைத் தொடர்ந்து மற்ற மசாலா பொருட்களான கொத்தமல்லி விதை, வரமிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து பாகற்காய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து வதக்க வேண்டும். புளிக்கரைசலும் மசாலா பொடியும் சேர்த்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
இறுதியாக எள்ளுப் பொடி மற்றும் சிறிய வெல்லத்துடன் சேர்த்து நன்கு கலக்கி இறக்கினால், அருமையான பாலக்காடு ஸ்பெஷல் பாகற்காய் எள்ளுக்கறி தயார். இந்த உணவு மட்டும் இல்லாமல், சாப்பாட்டின் மகிழ்வும் கூடும். இவ்வாறு சமைத்தால் பாகற்காயின் கசப்பும் குறைந்து, விருப்பமின்றி இருந்தவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.