பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் தெஹ்ரிக்–இ–இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் மற்றும் குற்றச்சாட்டு வழக்குகளில் 2023ல் கைது செய்யப்பட்டார். தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சமீபகாலமாக தன்னைச் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாக மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். அவருடன் அவரது மனைவியும் பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் தனது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும், என் மனைவிக்கும் மனித உரிமைகள் மற்றும் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டுள்ளன. அவரது அறையில் உள்ள தொலைக்காட்சியையும் அகற்றிவிட்டனர். சிறையிலுள்ள ஒருகர்னல் மற்றும் கண்காணிப்பாளர், ராணுவ தளபதி அசிம் முனீரின் உத்தரவின் பேரில், திட்டமிட்டு மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் மேலும் குற்றஞ்சாட்டியதாவது, தனது மனைவி புஷ்ரா பீபி, கடந்த காலத்தில் அசிம் முனீரை ஐ.எஸ்.ஐ. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் சந்திக்க மறுத்ததாகவும், அதனால் பழிவாங்கும் எண்ணத்தில் தற்போது இருவருக்கும் சிறையில் மோசமான அனுபவங்களை ஏற்படுத்தப்படுவதாகவும் கூறினார். இந்த பின்னணியில், “எனக்கு சிறையில் ஏதும் நேர்ந்தால், அதன் முழுப் பொறுப்பும் அசிம் முனீர மீதுதான்” என அவர் வலியுறுத்தினார்.
இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, பாகிஸ்தான் முழுவதும் பி.டி.ஐ கட்சியினர் பரபரப்பான போராட்டங்களை திட்டமிட்டுள்ளனர். அவரிடம் நடைபெறும் இந்தச் செயற்பாடுகள், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கண்டப்படுகிறது. இது பாகிஸ்தானில் மீண்டும் ஒரு அரசியல் சுழற்சி சுழலும் ஆரம்பத்தை குறிக்கிறது.