தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு அதி நவீன கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்தது:
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணியான செüந்தரிக்கு (26) வயிற்று வலி ஏற்பட்டதால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், கல்லீரலில் கட்டி இருப்பது தெரிய வந்தது. மேலும், இக்கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 4 மாத கரு இருப்பதால் அறுவை சிகிச்சை சவாலாக இருந்தது.
என்றாலும், குடல் நோய் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் உ. அரவிந்தன், மயக்க மருத்துவர் சாந்தி பால்ராஜ், மகப்பேறு மருத்துவர் ஆர். ராஜராஜேஸ்வரி, மருத்துவர்கள் பொன். சிதம்பரம், ஆர். செந்தில்குமரன், ஆர். சுதாகர், சி. குமரன், ந. மகேஸ்வரி மற்றும் குழுவினர் செüந்தரிக்கு அதி நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் உதவியுடன் கல்லீரலில் இருந்த கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், சிசுவும் ஆரோக்கியமாக உள்ளனர்.
இத்தகைய நிலைமையில் அறுவை சிகிச்சையின்போது கருச்சிதைவு ஏற்படும் அபாயமும், சில சமயம் தாயின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம். இந்தச் சவாலை மருத்துவர்கள் மிகத் துல்லிய திட்டமிடலுடன் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ. 5 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது என்றார் பாலாஜிநாதன்.
அப்போது மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் என். ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரியாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.