ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், தொடர்ந்து வெளியாகும் அப்டேட்களால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலாவது சிங்கிள் வெளியானதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் நேற்று வெளியான ‘மோனிகா’ பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அளித்த நேர்காணல் தற்போது வைரலாகியுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் பணியாற்றும் அனுபவத்தைப் பற்றி ஸ்ருதிஹாசன் கூறியதாவது, “ரஜினி சார் என்பது தமிழ் சினிமாவின் ஒரு தூண். அவர் ஒரு கூர்மையான புத்திசாலி மற்றும் அன்பும், நேர்த்தியும் நிரம்பிய நபர். அவருடன் வேலை செய்த அனுபவம் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது,” என்றார். ரஜினியைப் பற்றி இவ்வாறு நேரடி அனுபவம் பகிர்ந்த ஸ்ருதியின் இந்த உரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
‘கூலி’ திரைப்படத்தில் ஸ்ருதியுடன் இணைந்து சத்யராஜ், ரெபா மோனிகா, பூஜா ஹெக்டே, நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகீர், அமீர்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்திய அளவில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது டிஜிட்டல் உரிமைகள், வெளியூர் வசூல் ஆகியவற்றில் இப்படம் முன்னமே மாபெரும் கலெக்ஷனை ஈட்டியுள்ளது.
இதனிடையே, ‘மோனிகா’ என்ற இரண்டாவது பாடலில் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்த ‘காவாலா’ பாடலை நினைவுபடுத்தும் வகையில் ஹார்பர் பின்னணியில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், லோகேஷ் இயக்கும் இந்த திரைப்படம் ரூ.1000 கோடி வசூலையும் தாண்டும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.