அமெரிக்கா: டாலரில் கை வைத்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார். இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.