வாஷிங்டன்: தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட வருத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்த எலான் மஸ்க், அரசு செயல்திறன் மேம்பாட்டு துறையின் தலைவராக இருந்தார். சில வாரங்களுக்கு முன் அவர் அந்த பதவியில் இருந்து விலகினார். அதன்பின் டிரம்ப் அரசு ஒரு புதிய செலவு மசோதாவை கொண்டு வந்தது. ஆனால், எதிர்க்கட்சியை விட கடுமையாக எலான் மஸ்க் அதை விமர்சித்தார். அந்த மசோதாவை அவர் “அருவருப்பானது” எனக் கூறினார்.

இவ்விமர்சனத்தால் கோபமடைந்த டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்திற்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், மஸ்க் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், அவர் எல்லை மீறியதாகவும், அதற்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் எலானுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஆனால், சற்று ஏமாற்றமடைந்தேன்,” எனத் தெரிவித்தார். அதன் பிறகு, டெஸ்லா நிறுவன தலைமை அதிகாரியாக உள்ள மஸ்க்கின் வருத்தத்தைக் கடைசியாக டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதைப் பற்றி கூறும்போது, “மஸ்கின் அறிக்கையை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் அதனை பாராட்டுகிறார். மேலும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாங்கள் அமெரிக்க மக்களின் வணிக நலன்களை தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என்று கூறினார்.
கடந்த வாரம் வரையிலான கருத்து வெறுப்புகள் மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு, இந்த வாரம் டிரம்பும் மஸ்கும் மீண்டும் நட்புடன் இணைந்து பேசுவது குறிப்பிடத்தக்கதாகும்.