வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள செய்தி, உலக வர்த்தக சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 10 நாடுகளுக்கும் 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அமெரிக்காவின் வர்த்தக நியாயத்தை மீறும் செயல்களுக்காகவும், அமெரிக்க எதிர்ப்பு நோக்கங்களை விரிவுபடுத்தும் நாடுகளுக்கான தண்டனையாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முந்தைய சூழலில், டிரம்ப் ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கான வரிகளை கடுமையாக உயர்த்தி, பின்னர் அதை 90 நாட்கள் ஒத்திவைத்திருந்தார். அந்த கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ள நிலையில், ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பையும் அவர் விடுத்திருந்தார். ஆனால் விரைவில் 12 நாடுகளுக்கான புதிய வரி அறிவிப்புகளுக்கு கையெழுத்திட்டதாகவும், அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவை அனைத்தும் வளர்ந்துவரும் சக்திவாய்ந்த நாடுகளாக மாறிக் கொண்டிருக்க, அவற்றின் பொருளாதார ஒத்துழைப்புகளை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பாக பிரிக்ஸ் திகழ்கிறது.
பிரிக்ஸ் நாடுகள் புதிய பொதுக் கரன்சி ஒன்றை அமெரிக்க டாலருக்கு மாற்றாக உருவாக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டு, டாலரின் ஆதிக்கத்தை குலைக்கும் எந்த முயற்சியும் தண்டிக்கப்படும் என டிரம்ப் முன்பே எச்சரித்திருந்தார். அவர் அந்த எச்சரிக்கையை மீண்டும் உறுதி செய்து, புதிய வரி விதிப்பை கடுமையாக அமல்படுத்த உள்ளார் என்பதும் தற்போது உறுதி பெற்றுள்ளது.