தெஹ்ரான்: புதிய சட்டத்திற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. ஈரானின் சுகாதார துணை அமைச்சர் அலிரேசா ரைசி, இளைய ஈரானை உருவாக்க 15 முதல் 49 வயது வரையிலான பெண்கள் தொடர்ந்து குழந்தைகளைப் பெற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானில் ஆண்டுதோறும் 15 வயதுக்குட்பட்ட சுமார் 1.84 லட்சம் சிறுமிகள் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த நாட்டில் நூற்றுக்கணக்கான 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், சிறுமிகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஈரான் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தின்படி, தந்தை தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்துகொள்ளலாம். அதாவது, 13 வயதை எட்டிய பிறகு, தத்தெடுக்கப்பட்ட அல்லது அவரது முன்னாள் கணவரால் வளர்க்கப்பட்ட ஒரு பெண் குழந்தையை தந்தை திருமணம் செய்து கொள்ளலாம். இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. பெயர் வெளியிட விரும்பாத ஈரானைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஈரானில் மன்னராட்சி நிறுவப்பட்ட போது, பெண்களின் திருமண வயது 18. பெண்களுக்கு விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் இருந்தன. ஆனால் 1979-ல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறியது. பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டன. தற்போது பெண் குழந்தைகளின் திருமண வயது 13 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதை 9 வயதாக குறைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண்களின் திருமண வயது 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, 13 வயது வளர்ப்பு மகளுக்கு அவளது தந்தையே திருமணம் செய்து வைக்கலாம். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை ஈரானிய சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கமேனி, சமீபத்தில் சமூக வலைதளங்களில், “இந்தியா, காசா, மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் குரல் எழுப்ப வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், அயதுல்லா கமேனியின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.ஈரானில் வாழும் சிறுபான்மையினரின் நிலைமையை அந்நாடு கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “ஈரானில் வாழும் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
2022-ல் ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 450-க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவை விமர்சிக்க ஈரானுக்கு எந்த வகையிலும் அருகதை கிடையாது” என்று தெரிவித்தனர்.