அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 வயது இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் மீது அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த இவர், 1992ஆம் ஆண்டு தனது இரு மகன்களுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, கலிபோர்னியா மாநிலத்தில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். உரிய ஆவணங்கள் இல்லையென அதிகாரிகள் கூறியதன் பேரில், ஹர்ஜித் கவுர் உட்பட 131 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
அவரது வக்கீல் கூறியதாவது, ஹர்ஜித் கவுருக்கு நாடு கடத்தும் முன் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. படுக்கை அளிக்கப்படாததால் தரையில் தூங்க வேண்டியிருந்தது. குளிக்க அனுமதியின்றி வைத்தனர். மேலும் இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், தரையில் இருந்து எழுந்திருப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. கை, கால் விலங்குகள் போட முயன்ற அதிகாரியை, வயதைக் காரணம் காட்டி மற்றொரு அதிகாரி தடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிஸினஸ் வகுப்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், சிறிய விமானத்தில் அனுப்பிவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹர்ஜித் கவுரின் மருமகள் மஞ்சி கவுர் கூறுகையில், “அவரிடம் நிரந்தர குடியிருப்பு ஆவணங்கள் இல்லாவிட்டாலும், 13 ஆண்டுகளாக சட்டப்படி சுங்க மற்றும் குடிவரவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் வரி செலுத்தினார். எனவே, அமெரிக்காவில் வாழ அவர் தகுதியானவர்,” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம், அமெரிக்காவில் குடியேற்றத்தினரின் நிலைமை மற்றும் அதிகாரிகள் காட்டும் அணுகுமுறையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தியர்களிடையே அமெரிக்கா உண்மையில் வாழத் தகுந்த இடமா என்ற விவாதத்தை இது தூண்டியுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு வாழ்ந்தவர்களுக்கே இப்படிப்பட்ட கொடுமை நேர்ந்துள்ளதாக கூறப்படுவதால், சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.