ராமேஸ்வரம்: இலங்கை நாடாளுமன்றம் 10 மாதங்கள் முன்னதாக கலைக்கப்பட்டதால், முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்த 85 பேர் ஓய்வூதியத் தகுதியை இழந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த செப்டெம்பர் 21-ம் தேதி இடம்பெற்ற 9-வது ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் (ஜேவிபி) தலைவர் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்று கடந்த திங்கட்கிழமை அதிபராகப் பதவியேற்றார்.
இதனையடுத்து இடைக்கால பிரதமராக அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். செப்டெம்பர் 24-ம் தேதி இரவு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து 10 மாதங்கள் உள்ள நிலையில் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் மாதம் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
4-ம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின்னர் நவம்பர் 21-ம் தேதி புதிய நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1977-ம் ஆண்டு ஓய்வூதியச் சட்டத்தின் பிரகாரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் விதிகளின்படி ஓய்வூதியம் பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 5 ஆண்டுகள் முழுப் பதவிக் காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக 5 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் இலங்கை ரூபாவில் மாதம் 45 ஆயிரம் ரூபா ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அதேநேரம், இரண்டு முறை, அதாவது 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால், அவருக்கு இலங்கை ரூபாயில் 55,000 மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தை முன்னர் கலைத்ததன் காரணமாக, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட, அதாவது முதல் தடவையாக வெற்றி பெற்ற 85 உறுப்பினர்கள், ஓய்வூதியத் தகுதியை இழந்துள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மற்றும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து மூவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.