அசாம்: காசிரங்கா தேசிய பூங்காவில் ஜீப்பில் இருந்து தவறி விழுந்த தாய் சுதாரித்துக்கொண்டு மகளுடன் வேகமாக ஓடி ஜீப்பில் ஏறி ஆக்ரோஷத்துடன் நெருங்கிய காண்டாமிருகத்திடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும்.
இங்கு ஜீப் வண்டி சஃபாரி சவாரி மூலம் பார்வையாளர்களுக்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் பிற விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பை கிடைக்கிறது. வழக்கமான இந்த சஃபாரி ஒரு தாய் மற்றும் அவரது மகளுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், ஆக்ரோஷத்துடன் காண்டாமிருகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு மூன்று ஜீப்கள் அங்கு வருகிறது.
அதில் ஒரு ஜீப் வலதுபுறம் திரும்பும்போது உள்ளே ஒரு தாய் தனது மகளுடன் சேர்ந்து தரையில் விழுகிறார். தாய் உதவி கேட்டு கூப்பாடுபோடத் தொடங்கினார். அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருகிறது.
பதறியடித்த தாய் சுதாரித்துக்கொண்டு மகளுடன் வேகமாக ஓடி ஜீப்பில் ஏறி ஆக்ரோஷத்துடன் நெருங்கிய காண்டாமிருகத்திடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். மற்றொரு ஜீப்பில் இருந்த சுற்றுலாப்பயணி இந்த பயங்கர சம்பவத்தை கேமராவில் படம்பிடித்துள்ளார். இந்த இந்த சம்பவம் காசிரங்கா தேசிய பூங்காவின் பகோரி மலைத்தொடரில் நடந்துள்ளது.